×

கல்வராயன்மலை பெரியார் நீர்வீழ்ச்சியில் கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழும் சுற்றுலா பயணிகள்

சின்னசேலம், டிச. 31:  கல்வராயன்மலையில் உள்ள பெரியார் நீர்வீழ்ச்சியில் கொட்டும் நீரில் குளித்து மகிழ ஏராளமான சுற்றுலா பயணிகள், மாணவர்கள் கார், வேன்களில் படையெடுத்து வந்து சென்றனர்.  விழுப்புரம் மாவட்டம் கல்வராயன்மலையில் பெரியார், மேகம், எட்டியாறு, முண்டியூர் அருகே கவ்வியம் நீர்வீழ்ச்சி, செருக்கல் போன்ற நீர் வீழ்ச்சிகள் உள்ளது. இதில் பெரியார், மேகம் நீர்வீழ்ச்சிகள் மட்டும் சுற்றுலா பயணிகள் விரும்பும் இடமாக உள்ளது. அதிலும் மேகம் நீர்வீழ்ச்சிக்கு குளிக்க செல்ல வேண்டுமானால் நீண்ட தூரம் ஒற்றையடி பாதையில் நடந்து செல்ல வேண்டும். அதைப்போல முண்டியூர் அருகே உள்ள கவ்வியம் நீர்வீழ்ச்சியும் பள்ளமான இடத்தில் இருப்பதால் அங்கும் செல்வது மிக கடினமாகும். இதனால் மேகம், கவ்வியம் நீர்வீழ்ச்சிகளில் குளிப்பதற்கு பெரும்பாலும் வாலிபர்கள் கூட்டமே செல்லும். ஆனால் பெரியார் நீர்வீழ்ச்சி வெள்ளிமலை சாலையின் ஓரத்திலேயே உள்ளதால், இந்த நீர்வீழ்ச்சிக்குத்தான் பாண்டி, கடலூர் போன்ற வெளியிடங்களில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் கார், பஸ், டிராவல்ஸ் போன்ற வாகனங்களில் வந்து குளித்து மகிழ்ந்து செல்வது வழக்கம்.  

  இந்நிலையில் கல்வராயன்மலைப்பகுதியில் கடந்த ஒரு மாத காலமாக அதிக மழை பெய்து வந்ததால் நீர்வீழ்ச்சியில் காட்டாற்று வெள்ளம் வந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக மேகம், பெரியார் நீர் வீழ்ச்சிகளில் சீரான நீர்வரத்து தொடங்கியது. இதையொட்டி வெள்ளிமலைக்கு செல்லும் சாலை ஓரத்தில் உள்ள பெரியார் நீர்வீழ்ச்சிக்கு விழுப்புரம், கடலூர், பாண்டி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் மற்றும் அரையாண்டு விடுமுறையில் இருக்கும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் பைக், கார், வேன்களில் கூட்டம் கூட்டமாக வந்து குளித்து சென்றனர்.  மேலும் புத்தாண்டு தினத்திற்கு  இன்னும் ஒரே நாள் உள்ள நிலையில் பெரியார் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் வனத்துறையினரும், கரியாலூர் காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Kalvaramanaimalai Periyar Falls ,
× RELATED தொடர்மழை எதிரொலி: கல்வராயன்மலை...